

கடலூர்,
கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நேற்று கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அருளானந்தம், துணை செயலாளர் அருள் செல்வராஜ், மூத்த துணை செயலாளர்கள் இளங்கோவன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கடலூர், சிதம்பரம், நெய்வேலி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 100 வீரர், வீராங்கனைகள் வந்தனர். அவர்களை அணியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்கள் அணிக்கு 15 பேரும், பெண்கள் அணிக்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.
இதில் பயிற்சியாளர்கள் ராம்பிரசாத், முத்துராமன், தேசிய விளையாட்டு வீரர் தங்கதுரை, தமிழ்வாணன், நடராஜன், அப்துல்கனி, அமீர்ஜான், நெடுஞ்செழியன், தயாளன், போலீஸ் ஏட்டு தியாகு, அப்துல்லா, உடற்கல்வி இயக்குனர்கள் அசோகன், சந்திரமோகன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.