இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு டெபாசிட் கிடைக்காது அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

க.பரமத்தி ஒன்றிய கடைவீதியில் க.பரமத்தி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜிக்கு டெபாசிட் கிடைக்காது அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
Published on

க.பரமத்தி,

க.பரமத்தி ஒன்றிய கடைவீதியில் க.பரமத்தி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய துணை செயலாளர் குழந்தைசாமி, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தென்னிலை சண்முகம், அவைத்தலைவர் வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சரவணன் வரவேற்றார். தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் மீதான நீதிமன்ற தீர்ப்பு ஆட்சியை கலைக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்த துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என செந்தில்பாலாஜி உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார். அவர் 5 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது இந்த அரவக்குறிச்சி தொகுதிக்கு என்ன செய்து கொடுத்தார் என பட்டியல் இட முடியுமா?. அவர் பொறுப்பில் இருக்கும் போது அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது அரசியல் செய்வதற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். சட்டமன்ற இடைத்தேர்தலாகட்டும், பாராளுமன்ற தேர்தலாகட்டும் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியாக இருக்கட்டும் அல்லது கரூர் தொகுதியாகட்டும் அதில் போட்டியிட்டு டெபாசிட் வாங்கட்டும் பார்க்கலாம் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் வீராச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் செந்தில், தெற்கு ஒன்றிய பொருளாளர் ஏ.பி.சுப்ரமணி, இளைஞர் அணி நிர்வாகிகள் குப்பம் செந்தில், அத்திப்பாளையம் செல்வக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் க.பரமத்தி ஊராட்சி கழக செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com