குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த கழிவுநீர்: கொரட்டூரில், பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொரட்டூரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த கழிவுநீரை அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த கழிவுநீர்: கொரட்டூரில், பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Published on

சென்னை,

அம்பத்தூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் கொரட்டூர் ஏரியில் கலக்கிறது. கழிவுநீருக்கு என்று தனியாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கழிவுநீர் கால்வாயில் சமீப காலமாக அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் கொரட்டூரில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரட்டூர் 47-வது தெரு, 49-வது தெரு, ரெயில்நிலைய தெரு, பிள்ளையார் கோவில் தெரு, வெங்கட்ராமன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழிவுநீர் புகுந்துள்ளதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே சென்று பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் மீறி செல்பவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவலம் உள்ளது. கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்தால்தான் அந்த ஏரியை பாதுகாக்க முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

தங்களுடைய தெருக்களில் புகுந்த கழிவுநீரை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொரட்டூர்வாசிகள், அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு உரிய பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கொரட்டூர் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் கொரட்டூரில் உள்ள குழந்தை ஏசு ஆலயம் அருகே நேற்று மாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்கள் திடீரென சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து உடனடியாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கழிவுநீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமசரம் செய்தனர். இதனால் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இருப்பினும் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com