புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதுவை அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

புதுச்சேரி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி நேற்று புதுவையில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி புதுவை நகரப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புதுவை பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும் குபேர் பஜார், அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, 100 அடி ரோடு, காமராஜ் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில் மீன் மார்க்கெட்டுகள் திறந்திருந்தன.

வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் மற்றும் தி.மு.க.வினர் மோட்டார்சைக்கிளில் சென்று நகரப்பகுதிகளில் திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி கேட்டுக்கொண்டனர்.

காலை நேரத்தில் இருந்தே புதுவை அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. ஆனால் தமிழக அரசு பஸ்கள் ஓடின. புதுவை பஸ் நிலைய பகுதிக்கு வந்த அந்த பஸ்கள் பயணிகளை ஏற்றி சென்றன.

இதைத்தொடர்ந்து தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டணி கட்சியினர் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் தமிழக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. தமிழக அரசு பஸ்களுடன் போலீசார் புதுவை மாநில எல்லைவரை சென்று பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் புதுவை பகுதியில் போக்குவரத்து முழுக்க முழுக்க தனியார் பஸ்களையே நம்பியே உள்ளன. அந்த பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

பஸ்கள் இயக்கப்படாத நிலையில் பெரும்பாலான டெம்போ, ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அதிக கட்டணம் செலுத்தி அவற்றில் பொதுமக்கள் பயணம் செய்தனர். புதுவை காமராஜ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கியது. அந்த பங்க் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்தது. இதேபோல் ஒதியஞ்சாலை பகுதியில் திறந்திருந்த பெட்ரோல் பங்கையும் அரசியல் கட்சியினர் மூட செய்தனர்.

அதேபோல் புறநகர் பகுதிகளான வில்லியனூர், திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில், பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதிகளில் ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், காய்கறி, டீக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இப்பகுதிகளுக்கு புதுச்சேரியில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், சரக்கு வாகனங்களும் இயங்கவில்லை. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மருந்து கடைகள், பால் பூத்துகள் மட்டும் திறந்திருந்தது. திருக்கனூர் பகுதியில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்ததை காணமுடிந்தது.

நேற்றைய முழுஅடைப்பின்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மாலையில் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. கடைகளும் திறக்கப்பட்டன.

முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக வில்லியனூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் தமிழ்வளவன் தலைமையில் நிர்வாகிகள் எழில்மாறன், வாகையரசு, தமிழரசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலை 10 மணியளவில் திரண்டனர். இவர்கள் சென்னையில் இருந்து புதுவைக்கு வரும் ரெயிலை வில்லியனூர் ரெயில் நிலையத்தில் மறிக்க ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையத்துக்கு சென்று தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் விரைந்து சென்று ரெயில் வருவதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 95 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இதனால் வில்லியனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com