கும்மிடிப்பூண்டியில் சுடுகாட்டு பாதையை மீட்டுதரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாடு மற்றும் சுடுகாட்டு பாதையை மீட்டு தரக்கோரி கிராம மக்கள், சவ ஊர்வலத்துடன் சென்று ஒப்பாரி வைத்து தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டியில் சுடுகாட்டு பாதையை மீட்டுதரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவை சேர்ந்த பூவலை கிராமத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என அப்பகுதியில் உள்ள 28 சென்ட் சுடுகாட்டு நிலத்திற்கு சென்று வர 12 அடி அகலத்தில் ஏற்கனவே பாதை இருந்தது.

தற்போது சுடுகாட்டையும், அதற்கு செல்லும் பாதையையும் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து சுடுகாட்டையும், அதற்கான பாதையையும் மீட்டு தரும்படி கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இருளர் சமுதாய மக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

இருளர் இன மக்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாடு மற்றும் சுடுகாட்டு வழிப்பாதை தற்போது ஆக்கிரமிப்பில் இருந்து வருவதால் அவர்கள் மாற்று ஏற்பாடு ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சுடுகாட்டையும், சுடுகாட்டு பாதையையும் மீட்டு தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு பாடை கட்டி சவ ஊர்வலத்துடன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் அருள் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுரேஷ்பாபு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com