அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
Published on

மானாமதுரை,

மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடை பள்ளி, கோவில், பள்ளிவாசல் அருகில் இருந்ததால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. மேலும் கடை உள்ள பாதையில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாமல் அச்சப்பட்டனர். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கடை அகற்றப்பட்டது.

தற்போது மீண்டும் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வை தாசில்தார் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகில் கடை இருந்த இடத்தில் இருந்து பள்ளிவாசல், கோவில், பள்ளி உள்ளிட்டவை எவ்வளவு தூரத்தில் உள்ளன என்று அளவீடும் பணி மற்றும் கடை அமைப்பது தொடர்பாக ஆய்வுசெய்தனர்.

இந்த ஆய்வு குறித்து கேள்விபட்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால் அதிகாரிகள் தங்களது ஆய்வை நிறுத்திவிட்டு, அங்கிருந்து சென்றனர். முன்னதாக டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முத்தையா கூறுகையில், டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com