ஒற்றை தலைமை விவகாரம்: அ.தி.மு.க. உடையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. உடையும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஒற்றை தலைமை விவகாரம்: அ.தி.மு.க. உடையும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
Published on

அடையாறு,

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை கலங்கரை விளக்கம் அருகே பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சி மையத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம் ஆகியோர் முன்கூட்டியே கட்சி தலைமைக்கு தெரிவித்து விட்டனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கலைச்செல்வன் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களை அழைக்கவில்லை.

மாவட்டச்செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, வாக்குகள் சரிந்த இடத்தில் வாக்குகள் அதிகரிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், வரவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் 100 சதவீத வெற்றி பெறுவது போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

கூட்டம் சுமார் 1 மணி நேரம் எந்த பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது. ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பிரச்சினை வருமா? அதன் மூலம் அ.தி.மு.க. உடையுமா? என எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒற்றை தலைமை குறித்து கூட்டத்தில் எந்த பிரச்சினையும் வரவில்லை.

ராணுவ கட்டுப்பாட்டுடன் அமைதியாக கூட்டம் நடந்தது, கூட்டத்தில் பெரிய அளவில் சண்டை, பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அமைதியான முறையில் கூட்டம் நடைபெற்றது. எதிரிகளின் எண்ணத்தில் மண் விழுந்த கதையாக தான் கூட்டம் நடைபெற்றது. கவர்னர்- முதல்-அமைச்சர் சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com