1,01,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1,01,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1,01,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், நகர்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 75 இடங்களில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிகள் தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 பேருக்கு போடப்பட்டு வந்த நிலையில் பின்னர் நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 பேருக்கு வரை செலுத்தப்பட்டது. இதற்காக தடுப்பூசி போட வரும் பொதுமக்களிடம் கொரோனா நோயின் தாக்கம், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எத்தனை பேருக்கு தடுப்பூசி?

அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து ஆயிரத்து 507 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் முதல்முறை தடுப்பூசியை 86,745 பேர் செலுத்திக்கொண்டனர். இவர்களில் 14,762 பேர் 2-ம்முறை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

கையிருப்பு

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 560 தடுப்பூசிகளும், அரசு மருத்துவமனைகளில் 320 தடுப்பூசிகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,050 தடுப்பூசிகளும், மாவட்ட சுகாதார கிடங்கில் 690 தடுப்பூசிகளும் ஆக மொத்தம் 2,620 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை.

தற்போது தினந்தோறும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நோயில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநில சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தேவைக்கேற்ப பெற்று தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தட்டுப்பாடு இன்றி வழங்கல்

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் நாள்தோறும் தடுப்பூசி செலுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தேவைப்படும்போது உடனடியாக மாநில சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து அவை கிடைக்கப்பெற்றதும் தட்டுப்பாடு இன்றி வழங்கி வருகிறோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com