

திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனுதாக்கல் செய்து உள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக தமிழர்களை வஞ்சிக்கிற செயலில் துணிச்சலாக மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடந்த பிறகு கூட மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால் அதற்கு அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. காலம் தாழ்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது. அல்லது மேற்பார்வை குழு, கண்காணிப்பு குழு என்கிற பெயரில் ஏதேனும் ஒரு குழு அமைக்க தான் மத்திய அரசு முயற்சிக்கும். மத்திய அரசு பணியும் வரை தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.
மெரினா கடற்கரையில் போராடுவதற்கு ஐகோர்ட்டு அனுமதி மறுத்து உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தின் தலைநகரங்களிலும் இந்த அளவிற்கு கெடுபிடி கிடையாது. சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் தான் ஆர்ப்பாட்டம், பேரணி போன்றவை நடத்த முடியும். இது மிக மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.
புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி நடவடிக்கைகள் மேலோட்டமாக பார்க்கும் போது சரி என்று தோன்றலாம். ஆனால் இது ஒரு ஆதிக்க போக்கு ஆகும். மாநில அரசின் அதிகாரத்தை தட்டி பறிக்கும் செயல். எனவே, மத்திய அரசு கிரண்பெடியை திரும்ப பெற வேண்டும்.
சந்திரசேகரராவ், தி.மு.க. செயல் தலைவரையும், தலைவரையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு தான். இருப்பினும் இது அகில இந்திய அளவில் மதசார்பற்ற சக்திகளை சிதறவைப்பதற்கு இடமளிக்க கூடாது என்ற கவலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ளது.
3-வது அணி என்று அகில இந்திய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு முறை தான் வெற்றி பெற்று உள்ளது. காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்யும் நிலையில் உள்ளது. பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது எந்த வழியிலும் தேசத்திற்கு நல்லது அல்ல. மதசார்பற்ற வாக்கு வங்கிகளை ஒருங்கிணைப்பதில் மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ் போன்றவர்கள் ஈடுபடுவது அவசியமானது.
மே 1-ந் தேதி (நாளை) தேசிய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுபடுத்துவதற்கான போராட்டங்கள் நடைபெற உள்ளன. டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் பங்கேற்கிறேன்.
செம்மரக் கடத்தலுக்கு பின்னணியில் மிகப்பெரிய மாபியா கும்பல் இயங்குகிறது. இது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அப்பாவி மக்களையும், ஏழை, எளிய தொழிலாளர்களையும், தமிழ்நாட்டில் இருந்து பிழைப்புக்காக ஆந்திரா செல்ல கூடியவர்களையும், திருப்பதிக்கு சாமி கும்பிட செல்பவர்களையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களை வதை செய்வது, கொலை செய்வது போன்ற நடவடிக்கையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு வழக்கம் போல் அமைதி காக்கிறது. இரு மாநில இடையிலான பிரச்சினையை தீர்த்து வைக்க மத்திய அரசுக்கு பொறுப்பு உள்ளது. இதில் தமிழக அரசும் மெத்தனமாக உள்ளது.
தற்போது திருப்பதி மலையில் உணவு அருந்தி கொண்டிருந்த தமிழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செம்மரக்கடத்தல் பின்னணியில் உள்ள மாபியா கும்பலை கண்டறிய மத்திய அரசு சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.