

கன்னியாகுமரி,
பெண்களின் சபரிமலை என்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இத்தகைய சிறப்புமிக்க கோவிலுக்கு தங்க ரதம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து தங்க ரதம் தயார் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அம்மன் தங்க ரத அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடியில் ரதத்திற்கான வேலைகள் நடந்தது. சிற்பி கல்யாணசுந்தரம் என்பவர் வடிவமைத்தார். ரூ.4 கோடி செலவில் 9 கிலோ தங்கம், 300 கிலோ செம்பு கலந்து தங்க ரதம் வடிவமைக்கப்பட்டது. 3 டன் எடை கொண்டது. 12 அடி உயரமுடையது.
மேலும் தேரில் சிறப்பம்சமாக வைஷ்ணவி தேவி முதல் பகவதி அம்மன் வரைக்கும் 36 பெண் தெய்வங்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 மாதமாக தேரை உருவாக்கும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ரதம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கோவிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. இதனையொட்டி மயிலாடியில் தயாரிக்கப்பட்ட தங்க ரதம் அலங்கரித்து கன்டெய்னர் லாரியில் வைத்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பகவதி அம்மன் கோவிலில் பாதத்தில் வைத்திருந்த பட்டு வஸ்திரத்தை மேல்சாந்தி விட்டல் போற்றி எடுத்தார். பிறகு அதனை ரதத்தின் மீது வைத்து தீபாராதனை காட்டினார். இதனையடுத்து அவர் சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் ரதம் புறப்பட்டு சென்றது.
அம்மன் தங்க ரத அறக்கட்டளை தலைவர் ரகுபதி ராஜாராம், ஆர்.எஸ்.எஸ். கோட்ட அமைப்பாளர் பிரசோப குமார், மாவட்ட பா.ஜ.க. தலைவர் முத்துகிருஷ்ணன், கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன், பகவதி அம்மன் கோவில் மேலாளர் சிவராமசந்திரன் மற்றும் பா.ஜ.க.வினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.