

பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடிய பொதுமக்கள் நேற்று காணும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நற்பணி மன்றம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அந்தந்த தெரு சிறுவர், சிறுமிகள், இளைஞர், இளம்பெண்கள், திருமணமான ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் உற்சாகத்துடன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பரிசளிப்பு
இளவட்டக்கல்லை தூக்குதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், சிலம்பம், கபடி, மோட்டார் சைக்கிளை மெதுவாக ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் இளைஞர்களுக்கு நடத்தப்பட்டன. கோலப்போட்டி, பாட்டிலில் நீர் நிரப்புதல், ஸ்கிப்பிங் உள்ளிட்ட போட்டிகள் இளம்பெண்களுக்கு நடத்தப்பட்டன. சாக்குப்போட்டி, கரண்டியில் எலுமிச்சை பழத்தை வைத்து ஓடுதல், ஓட்டப்பந்தயம், முறுக்கு கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட எளிதான போட்டிகள் சிறுவர்-சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் நடத்தப்பட்டன. மேலும் மாலையில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.