ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் மீனவர்களிடம் ஓட்டு வேட்டை

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் மீனவர்களிடம் ஓட்டு வேட்டையாடினார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் மீனவர்களிடம் ஓட்டு வேட்டை
Published on

காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பழையகாயலில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். கடற்கரை பகுதியில் மீனவர்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்து ஓட்டு வேட்டையாடினார்.தொடர்ந்து முக்காணி, கோவங்காடு, தெற்கு கோவங்காடு, சம்படி, சென்னல் மாநகரம், ஆறுமுகமங்கலம், மாரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், மேளதாளம் முழங்கவும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேசியதாவது:-

பா.ஜனதா அரசின் கைப்பாவை

மத்திய பா.ஜனதா அரசின் கப்பாவையாக அ.தி.மு.க. அரசு உள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் உரிமைகளை இழந்து தவிக்கின்றனர். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவர்களை நயவஞ்சகமாக சேர்க்கின்றனர். இதனால் தமிழக இளைஞர்கள், இளம்பெண்கள் வேலைவாய்ப்பின்றி

வறுமையில் வாடுகின்றனர்.

தந்தை வழியில்...

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் என்னுடைய தந்தை ஊர்வசி செல்வராஜ் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ஏராளமான நலத்திட்டங்களை நிறைவேற்றினார். அனைத்து கிராமங்களுக்கும் சாலை, குடிநீர் வசதி செய்து கொடுத்தார். புதிய பாலங்கள், பள்ளிக்கூட வகுப்பறை கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சமுதாய நலக்கூடம், நூலகம் போன்றவற்றை அமைத்து கொடுத்தார்.அவரது வழியில் நானும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று மக்களுக்கு தொண்டாற்றுவேன். தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் நிறைவேற்றுவேன்.

தூண்டில் வளைவு

சென்னையில் உள்ள எனது கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களை இலவசமாக படிக்க வைத்து வருகிறேன். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களும், இலவசமாக உயர் கல்வி பயிலவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரவும் ஏற்பாடு செய்வேன். இந்த தொகுதியில் அடிக்கடி வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் கிடைத்திட செய்வேன்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வழங்கிட ஏற்பாடு செய்வேன். அனைத்து குளங்கள், கால்வாய்கள், ஓடைகளை தூர்வாரி, கரைகளை பலப்படுத்துவேன். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன். பழைய காயலில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில், தூண்டில் வளைவு அமைக்க ஏற்பாடு செய்வேன்.

கை சின்னத்தில் வாக்களித்து...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டவும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி தொடங்கிடவும் அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி, காவல்காடு சொர்ணகுமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன், கொட்டாரகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் துரை, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், பாலமுருகன், சுப மாரியப்பன், ஆனந்த், பிரபாகரன், வேங்கையன், காயல் முகமது, பழையகாயல் கூட்டுறவு சங்க தலைவர் ஜெய்சங்கர், பழையகாயல் மைக்கேல், ஜாக்சன், மும்பை மாதவன், சேவியர், நகர செயலாளர்கள் சாயர்புரம் அறவாழி, ஏரல் பார்த்தீபன், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் துரை,

வட்டார தலைவர்கள் தாசன், சொரிமுத்து பிரதாபன், ஒன்றிய கவுன்சிலர் பாரத், டேவிட் பிரபாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட பொருளாளர் எடிசன், மகளிரணி பிரவீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com