

ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், கருங்குளம் வட்டார பகுதியான கொங்கராயகுறிச்சி மேற்கு தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்து, கருங்குளம் வட்டார பகுதிகளான ஆறாம்பண்ணை முஸ்லிம் தெற்கு தெரு, செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை, கருங்குளம் காமராஜர் தெரு, வல்லகுளம் பிள்ளைமார் தெரு, அரசர்குளம் காமராஜர் சிலை, மல்லல், உடையநேரி, மணல்விளை, அரியநாயகிபுரம், திருவரங்கப்பட்டி, கால்வாய், கால்வாய் அஹ்ரகாரதெரு, புளியங்குளம், ஆழ்வார்திருநகரி வட்டார பகுதிகளான கண்டுகொண்டான், மாணிக்கம், திருவேங்கடபுரம், கோவில்குடியிருப்பு, வைத்தியலிங்கபுரம், வாலசுப்பிரமணியபுரம், குறியன்குளம், மரக்குடி, குறிப்பன்குளம், சின்னமாடன் குடியிருப்பு, மீரான்குளம், அம்பலச்சேரி வடக்கூர், பேய்க்குளம், உள்ளிட்டபகுதிகளில் திறந்தவாகனத்தில் நின்றபடி கைசின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.
தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. கருங்குளம் பகுதி பின்தங்கிய பகுதியாக உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர எனக்கு கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புடன்கேட்டுக்கொள்கிறேன். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் என்னை தேர்ந்தெடுத்தால் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவேன். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். பேருந்து வசதி இல்லாத இடங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுப்பேன்.
இப்பகுதியில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குங்கள். உங்களுடன் பக்கபலமாக நின்று உங்களுடைய எந்த குறை இருந்தாலும் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்யது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் வெற்றி பெற்றவுடன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தகுதியின் அடிப்படையில் லஞ்சம் ஊழல் எதுவுமின்றி அரசாங்க வேலை உறுதியாக கிடைக்கும். வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து நலத்திட்ட பணிகளும் நடைபெறும். தொழில் கூடம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் தொகுதி கிராம பகுதியில் எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் இல்லாமல் உள்ளது. கருங்குளம் கிராம பகுதிகளில் செல்லும் இடங்களில் எல்லாம் சாலைகள் குண்டும் குழியுமாக சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது.
கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை, நீராதாரத்தை பெருக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது தந்தை ஊர்வசி செல்வராஜ் கடந்த 2006-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது காலத்தில் ஸ்ரீவைகுண்டம் பாலம், சமுதாய நலக் கூடங்கள், சாலைகள் இல்லாத ஊர்களுக்கு சாலை வசதி, பேருந்து வசதி என ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களிடம் நல்ல திட்டங்களை செயல்படுத்தி நற்பெயர் பெற்றுள்ளார். எனது தந்தையை போல ஸ்ரீவைகுண்டம் தொகுதி நன்மைக்காக மக்களோடு மக்களாக நின்று பணியை செய்வேன். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் திருப்புமுனையாக அமைய உள்ளது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை வசதி கோரிக்கைகளை ஒன்றும் நிறைவேற்றவில்லை. சிறு, சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உச்சிக்கு சென்று கொண்டுள்ளது. மக்களை பற்றி கவலைப்படாத ஒரு அரசு செயல்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்துக்கு விவசாயிகள், காங்கிரஸ், தி.மு.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறோம். மக்கள் விரோத அரசை அகற்ற அனைது தரப்பு மக்களும் தயாராகி விட்டனர்.
மு.க.ஸ்டாலின் சிறப்பான தேர்தல் அறிக்கை அறிவித்துள்ளார். அவர் வெற்றி பெற்றவுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதா மாதம் உரிமைத் தொகையாக வழங்கப்படும், 100 நாள் வேலை 150 நாள் வேலையாக உயர்த்தி வழங்கி 300 ரூபாய் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக உருவாக்கி இருக்கிறார்கள்.
2006-ல் எப்படி என் தந்தை ஊர்வசி செல்வராஜ் இந்தக் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினராக இருந்து உங்களுக்கு குரல்கொடுத்து அனைத்து பணிகளையும் அவர் திறம்பட செய்தாரோ, அதேபோல நானும் மு.க.ஸ்டாலின் வழிநடத்தலின் கீழ் உங்களோடு இருந்து இந்த பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரவும், அனைத்து திட்டங்களையும் நன்மைகளையும் கொண்டு வந்து சேர்ப்பேன். எனவே தமிழகத்தில் விடிவு ஏற்பட வருகிற 6-ந் தேதி கை சின்னத்தில் வாக்களித்து எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு அனைத்து உரிமைகளையும் மத்திய பா.ஜனதா அரசிடம் தாரைவார்த்து விட்டது. இதனால் மக்கள் விரோத சட்டங்கள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்படுகின்றன. சிறுபான்மை இன மக்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், நீட் தேர்வு, புதிய வேளாண் சட்டங்கள் என மக்களை பெரிதும் பாதிப்பதையே மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
மத்திய பா.ஜனதா அரசிடம் உரிமைகளை இழந்த அடிமை போன்று அ.தி.மு.க. அரசு நடத்தப்படுகிறது. இந்த அடிமைத்தனத்தை களைந்து தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதற்கான தேர்தல்தான் வருகிற சட்டமன்ற தேர்தல். எனவே தமிழகம் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அனைவரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும். அவரது தலைமையில் நல்லாட்சி அமைய அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கருங்குளம் காங்கிரஸ் வட்டார தலைவர் புங்கன், வட்டார செயலாளர் நயினார், மாவட்ட துணை தலைவர் பொண்கிருஷ்ணன், கருங்குளம் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சித்தார்த்தன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவசுப்பிரமணியன், கருங்குளம் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் வனிதாஸ்டாலின், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் மற்றும் கருங்குளம் காங்கிரஸ் நிர்வாகிகள் ஐயப்பன், குணசேகரன், கந்தன், அப்துல்ஏவூப், அழகுமுத்து, செல்லபாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம்பெருமாள், தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கிபாண்டியன், தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.