எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 21,392 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 80 மையங்களில் 21,392 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 21,392 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்
Published on

தர்மபுரி,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 80 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 308 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 11,404 மாணவர்களும், 10,664 மாணவிகளும், 556 தனித்தேர்வர்களும் என மொத்தம் 22,624 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் தமிழ் முதல்தாள் தேர்வை எழுத மொத்தம் 21,728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 336 பேர் தேர்வு எழுத வரவில்லை. 21,392 பேர் நேற்று தமிழ் முதல்தாள் தேர்வை எழுதினார்கள்.

இந்த தேர்வுப்பணியில் பறக்கும் படையினர், அறை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்கள் என மொத்தம் 1995 அலுவலர்கள் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்குள் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ்வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்குள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செல்போன்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காரிமங்கலம் பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து பார்வையிட்டார். ஆய்வின்போது முதன்மைகல்வி அலுவலர் ராமசாமி உடனிருந்தார்.

இதேபோன்று மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பறக்கும் படை குழுவினரும் அனைத்து தேர்வு மையங்களிலும் திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com