காரைக்குடியில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கிய கூடைகள்

காரைக்குடி பகுதியில் தயாரான பலவண்ண கூடைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேங்கி கிடைக்கின்றன.
காரைக்குடியில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கிய கூடைகள்
Published on

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ளது ஆத்தங்குடி. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த வீடுகளை வெளியூர், வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்வையிட வருவார்கள். மேலும் இந்த வீடுகளில் சினிமா படப்பிடிப்பும் நடைபெறும். அங்கு மரக்கடைகளும் ஏராளம். மேலும் வீடுகளில் தரையில் பதிக்கும் ஆத்தங்குடி டைல்ஸ் ரகமும் பிரபலம். இவ்வாறான தொழில்கள் நிறைந்த ஆத்தங்குடியில் பிளாஸ்டிக் ஒயர்களால் பல வண்ண, வண்ண கூடைகளும் தயாராகின்றன.

கைவினை பொருளாக வித விதமாக கூடைகளை தயாரித்து வீடு நிறைய அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் ஊரடங்கு காரணமாக அந்த கூடைகளை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு

கூடை பின்னுவதற்கு தேவையான மூலப்பொருட்களை மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து கொண்டு வர போக்குவரத்து வசதிகளும் இல்லை. பஸ், லாரி, வேன் போன்றவை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது தான் இதற்கு காரணம். இதனால் இந்த தொழில் அடியோடு முடங்கிப்போய் உள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள பெண்கள் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து கூடை பின்னும் ராதா கூறியதாவது:-

கூடைகளை இப்பகுதியில் உள்ள பெண்கள் குழு அமைத்து தயார் செய்கின்றனர். நாள்தோறும் இந்த தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை சம்பளமாக கிடைக்கும். இங்கு பல வண்ணத்தில் சிறிய, பெரிய கூடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பூ மாடல் கூடைகள், அர்ச்சனை கூடைகளும், திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு பயன்படுத்தப்படும் சீர்வரிசை கூடைகள், நகரத்தார்கள் தரையில் அமருவதற்காக பயன்படுத்தப்படும் தடுக்கு உள்ளிட்டவற்றை தயாரிக்கிறோம். பிரபலமான ஆத்தங்குடி டைல்ஸ் போல, எங்கள் ஊரின் கூடைகளும் அனைவரையும் கவரும்.

உதவித்தொகை தேவை

இங்கு தயாரிக்கப்படும் கூடைகள் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், ஐதராபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவை ரூ.50 முதல் ரூ. 500 வரை விற்கப்படுகின்றன. தற்போதைய ஊரடங்கால் எங்கள் தொழில் முடங்கிப்போய் உள்ளது. மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் இந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டவற்றையும் வெளியூர்களுக்கு அனுப்ப முடியவில்லை. எனவே தமிழக அரசு, நிவாரண உதவியும், மானியமும் வழங்கினால் முடங்கிப்போன கூடை பின்னும் தொழில் மறுபடியும் புத்துணர்ச்சியுடன் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com