பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நடுரோட்டில் நின்று வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை - போக்குவரத்து பாதிப்பு

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நடுரோட்டில் நின்று வாகனங்களை ஒற்றை யானை வழி மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நடுரோட்டில் நின்று வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானை - போக்குவரத்து பாதிப்பு
Published on

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடி உள்ளது. இதன் வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், அங்கிருந்து தமிழகத்துக்கும் பஸ், கார், லாரி, வேன், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் லாரிகளில் கரும்பு பாரம் ஏற்றி செல்லப்படும்.

இந்த சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்ட உயர தடுப்பு கம்பி வழியாக அளவுக்கு அதிகமாக கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் நுழைய முடியாது. இதனால் டிரைவர்கள் நடுரோட்டில் கரும்புகளை வீசிவிட்டு செல்வது வழக்கமாகி வருகிறது. அவ்வாறு வீசப்படும் கரும்புகளை தின்று ருசி கண்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியே வருகின்றன.

அதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நடுரோட்டில் வந்து நின்று கொண்டது. இதனால் அந்த வழியாக பஸ், கார், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. யானைக்கு பயந்து சற்று தூரத்திலேயே வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். மேலும் யானையை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். ஒரு சிலர் யானையை கடந்து வாகனங்களில் செல்ல முயற்சித்தனர். அப்போது ஆவேசமடைந்த யானை அவர்களை துரத்தியது. இதனால் பயந்து பின்வாங்கினர்.

இவ்வாறு யானை வாகன ஓட்டிகளை துரத்துவதும், பின்னர் நடுரோட்டில் வந்து நிற்பதுமாக சுமார் 1 மணி நேரம் போக்குகாட்டியது. அதன்பின்னர் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதைத்தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

இதனால் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com