உடுமலையில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடுமலையில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

உடுமலை,

உடுமலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றும் ஒருவர் கடந்த மாதம் பஸ்சில் பணியில் இருந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதற்கு அவருக்கு கடந்த மாதம் 14-ந்தேதி ஒருநாள் விடுப்பு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 6 நாட்களுக்கு மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதற்காக விடுமுறை விண்ணப்பத்துடன் மருத்துவர் சான்றையும் இணைத்துள்ளார். மருத்துவ விடுப்பு முடிந்து 21-ந்தேதி பணிக்கு வந்து சேர்ந்தார்.

இந்த நிலையில் டிரைவர்கள்,கண்டக்டர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளப்பட்டியல் நேற்று வழங்கப்பட்டிருந்தது. அதில் அந்த கண்டக்டருக்கு, அவர் 6 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்த நாட்களுக்கு பணிக்கு வரவில்லை என்று கூறி ஊதியம் இல்லாத விடுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்தார். அவர், தனக்கு 56 நாட்கள் மருத்துவ விடுப்பு இருந்த நிலையில் 6 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு முறையாக விண்ணப்பித்தும் பணிக்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து 2-வது சிப்ட் பணிக்காக மதியம் பணிக்கு வந்திருந்த டிரைவர், கண்டக்டர்கள் ஆகியோர் உடுமலை மத்திய பஸ் நிலையம் பின்புறம் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டனர். அவர்கள் முறையாக விடுப்பு கேட்டு விண்ணப்பித்து விடுமுறை எடுப்பவர்கள் பலருக்கு தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், முகாம் பணியில் இருந்த அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் செல்போனில் பேசினார். அப்போது அவர், தான் வந்ததும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தார். இதை தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்ததன் பேரில் ஆர்ப்பாட்டம் நடத்திய டிரைவர்கள், கண்டக்டர்கள் அங்கிருந்து கலைந்து பணிக்கு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com