சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 6 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 6 பேர் கைது
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் பூட்டிக்கிடந்த வீடுகள் மற்றும் கோவில்களின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஒரு கும்பல் பணம், நகை, செல்போன் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச்சென்றது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை வலைவீசி தேடிவந்தனர்.

மேலும் அந்த பகுதிகளில் போலீசார் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆட்டோவில் வந்து வீடுகள் மற்றும் கோவில்களின் பூட்டை உடைத்து திருடிச்செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.

இதில் திருட்டில் ஈடுபட்ட அனைவரும் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து அந்த கும்பலை போலீசார் தேடிவந்தனர்.

மர்ம கும்பல் வந்த ஆட்டோ எண்ணை வைத்து, அவர்கள் அனைவரும் பல்லாவரம் அடுத்த திரிசூலம் மலையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த கொள்ளையர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் திரிசூலம் பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜா(வயது 21), சுந்தர்(23), டேவிட்(28), குமரேசன் (27), செல்வராஜ் (27) மற்றும் பழந்தண்டலம் பகுதியை சேர்ந்த ராஜ் என்ற ராஜசேகர் (20) என்பதும், நண்பர்களான இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியும், தனியாக செல்பவர்களை மிரட்டி வழிப்பறியும் செய்துவந்து உள்ளனர்.

இவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகை, எல்.இ.டி. டி.வி., மடிக்கணினி, விலை உயர்ந்த ஐபோன் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் அனைவரும் கொள்ளையடித்த பணத்தில் புதுச்சேரி சென்று மது அருந்திவிட்டு, அங்கு அழகிகளுடன் உல்லாசம் அனுபவித்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் 6 பேர் மீதும் சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கைதான 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com