2-வது நாளாக வேலை நிறுத்தம்: 95 சதவீத லாரிகள் ஓடவில்லை

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 2-வது நாளாக வேலூர் மாவட்டத்தில் 95 சதவீத லாரிகள் ஓடவில்லை. போதுமான அளவு காய்கறிகள் இருப்பு உள்ளதால் நேதாஜி மார்க்கெட்டில் விலை உயரவில்லை என சங்க தலைவர் தெரிவித்தார்.
2-வது நாளாக வேலை நிறுத்தம்: 95 சதவீத லாரிகள் ஓடவில்லை
Published on

வேலூர்,

18 சதவீத வரிவிதிப்புடன் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 20-ந் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்தது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 80 சதவீத லாரிகள் ஓடவில்லை. அதனால் சுமார் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் காரணமாக மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. வேலூரில் இருந்து இயங்கும் பெரும்பாலான லாரிகள் கோட்டையின் பின்புறமும், பல்வேறு வாகன நிறுத்தும் இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலூர் மாவட்டத்தில் 95 சதவீத லாரிகள் ஓடவில்லை. அதனால் சுமார் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக - ஆந்திர எல்லைப்பகுதிகளான கிறிஸ்டியான்பேட்டை மற்றும் நகரிப்பேட்டையில் வரிசையாக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்ல சில லாரிகள் மட்டும் இயங்குகின்றன என்று வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com