மசினகுடி-மாயார் சாலையில் உலா வந்த காட்டுயானைகள் - வாகன ஓட்டிகள் பீதி

மசினகுடி-மாயார் சாலையில் உலா வந்த காட்டுயானைகளால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
மசினகுடி-மாயார் சாலையில் உலா வந்த காட்டுயானைகள் - வாகன ஓட்டிகள் பீதி
Published on

மசினகுடி,

மசினகுடி மற்றும் அதனை சுற்றி உள்ள மாயார், சிங்காரா, மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மசினகுடியை சுற்றி உள்ள வனப்பகுதிகளும் பசுமையாக மாறி உள்ளன. வனப்பகுதி செழிப்பாக உள்ளதால் முதுமலைக்கு வனவிலங்குகளின் இடப்பெயர்ச்சியும் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக இடம்பெயர்ந்து வரத்தொடங்கி உள்ளன. மாயார் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்துள்ள காட்டுயானை கூட்டங்கள் அடிக்கடி மசினகுடி-மாயார் சாலையில் உலா வருவது அதிகரித்து உள்ளது. இதில் 18 காட்டுயானைகளை கொண்ட கூட்டம் அந்த சாலையோரத்திலேயே முகாமிட்டு உள்ளது.

குட்டிகளுடன் சாலையோரத்தில் சுற்றித்திரியும் அந்த காட்டுயானைகளால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

அவை அந்த வழியாக செல்லும் கார்கள், அரசு பஸ்கள், ஜீப்புகளை துரத்தி வருகின்றன. மேலும் சில நேரங்களில் சாலையின் நடுவில் உலா வரும் அந்த காட்டுயானைகள், வாகனங்கள் செல்ல முடியாத வகையில் வழிமறித்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த வழியாக சுற்றுலா பயணிகளும் அச்சத்துடன் வாகன சவாரி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனிடையே அந்த காட்டுயானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் அந்த காட்டுயானைகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com