

மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு மரங்கள் சாய்ந்தன. 80 அடி உயர வயர்லெஸ் கோபுரம் விழுந்து வீடு சேதம் அடைந்தது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேட்டுப்பாளையம் கல்லாறு, சிறுமுகை காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இடி மின்னலுடன் பலத்த மழையும் கொட்டியது.
இந்த மழையின் காரணமாக நகரில் ஆங்காங்கே சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்தடை ஏற்பட்டதால் நகரம் இருளில் மூழ்கியது. பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் கல்லாறு தூரிப்பாலம் அருகே வந்து கொண்டு இருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நாமக்கல்லை சேர்ந்த ஒர்க்ஷாப் உரிமையாளர் வரதராஜ் (வயது 65) மற்றும் அவரது குடும்பத்தினர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மரங்களை வெட்டி பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தினார்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த பணி அதிகாலை 3.30 மணிக்கு முடிவடைந்தது. இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சூறாவளி காற்றில் கல்லாறு ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 80 அடி உயர வயர்லெஸ்கோபுரம் சாய்ந்து அருகிலிருந்த வீடு மீது விழுந்தது. இதனால் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இதேபோல் கல்லாறு புதூரில் உள்ள செல்வம் என்பவரது வீட்டு சமையல் அறை மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. சூறாவளி காற்றால் சேதமடைந்த பகுதிகளை மேட்டுப்பாளையம் தாசில்தார் என்.ரங்கராஜன் பார்வையிட்டார். மேலும் பலத்த மழை காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோன்று காரமடை பகுதிகளான பனப்பாளையம், பனப்பாளையம் புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று வீசியது. இதில் 15-க்கும் மேற்பட்ட தோட்டங்களில் இருந்த சுமார் 50 ஆயிரம் வாழைகள் நாசமடைந்தன. மேலும் பனப்பாளையம் புதூரில் 5 மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.