

சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
அந்தக் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் தினமும் காலை சேத்துப்பட்டில் இருந்து அரசு பஸ் தடம் எண்:148-ல் பயணம் செய்வார்கள்.
அந்த பஸ் ஒருசில நேரத்தில் திடீரென நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்றும் தெரிகிறது.
இதைக் கண்டித்து மாணவ-மாணவிகள் நேற்று சேத்துப்பட்டு காமராஜர் பஸ் நிலையம் அருகில் ஆரணி சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நேரத்தில் தடம் எண்:148 என்ற பஸ்சை இயக்க ஏற்பாடு செய்வதாக கூறினர்.
இதையடுத்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் தடம் எண்:422 பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றனர். இதனால் சேத்துப்பட்டில் நேற்று காலை 9 மணியில் இருந்து 9.30 மணிவரை அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.