தேனியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

தேனியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தேனியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
Published on

தேனி,

தேனியில் தனியார் பள்ளி வாகனங்கள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டன. குறைபாடுகள் காணப்பட்ட 10 பஸ்களை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்கும் முன்பு பள்ளி வாகனங்களை வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்துத் துறை, போலீஸ் துறை ஆகிய துறைகள் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தேனி. உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்களின் இயங்குதிறனை சரிபார்த்து, தகுதிச்சான்று புதுப்பித்தல் பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 562 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இவற்றில் 503 வாகனங்கள் இயங்குதிறன் சரிபார்க்கப்பட்டது. இவ்வாறு சரிபார்க்கப்பட்ட பஸ்கள் வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, போலீஸ் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினரால் கூட்டாய்வு செய்யும் பணி தேனியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று நடந்தது. இதற்காக பள்ளி வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டன.

மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் ஆய்வு நடத்தப்பட்டது. வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள முதலுதவி பெட்டியில் மருந்துகள் உள்ளதா? அவற்றின் தேதி காலாவதியாகாமல் இருக்கிறதா? படிக்கட்டுகள் மற்றும் இருக்கைகள் சரியான உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? சாலையில் இயங்கும் நிலையில் முழுமையான கட்டுப்பாட்டுடன் உள்ளதா? அவசரகால கதவுகள் சரியான முறையில் இயங்குகிறதா? என்பதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது பள்ளி பஸ்களின் பின்புறம் போலீஸ் துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் எண் மற்றும் பள்ளியின் எண்கள் சரியாக எழுதப்பட்டு உள்ளதா? என்பதை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, பெரும்பாலான பஸ்களில் பள்ளியின் தொலைபேசி எண் எழுதப்பட்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன், பள்ளியின் பொறுப்பு அதிகாரி யாரோ அவரின் எண்ணை எழுதி வைக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் 10 பஸ்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. குறைபாடுகள் கொண்ட 10 பஸ்களையும் இயக்குவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. குறைபாடுகளை நிவர்த்தி செய்த பிறகு மீண்டும் சரிபார்ப்பு பணிகள் நடத்திய பின்னரே இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வைத் தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் மீட்புப்பணி, முதலுதவி அளித்தல் தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அளித்தனர். ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன், பெரியகுளம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) தங்கவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வம், வெங்கடேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com