புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்
Published on

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், திருச்சி சரகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க டி.ஐ.ஜி. சரவணசுந்தரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருக்கோகர்ணம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து வினியோகம் செய்து வந்துள்ளனர். பல ஆண்டுகளாக அவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

2 பேர் பணியிடை நீக்கம்

மேலும், கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கைதான கஞ்சா வியாபாரிகளின் செல்போன் எண்களுக்கு வந்த அழைப்புகளின் பட்டியலை வைத்து விசாரித்தனர்.

விசாரணையில், புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், திருப்புனவாசல் போலீஸ் நிலைய ஏட்டு முத்துக்குமார் ஆகியோர் கஞ்சா வியாபாரிகளிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டருக்கு மெமோ

இதற்கிடையே திருக்கோகர்ணம் பகுதியில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் விளக்கம் கேட்டு திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கஞ்சா விற்பனை தொடர்பாக மாவட்டத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com