

ஜோலார்பேட்டை,
பெங்களூருவில் இருந்து ஒரு சரக்கு ரெயில் சென்னைக்கு நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு பகுதி அருகே அதிகாலை 4 மணியளவில் வந்தபோது, சரக்கு ரெயிலில் முன்னெச்சரிக்கை அலாரம் அடித்தது. இதனால் சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை அங்கேயே நிறுத்தி விட்டு இறங்கி வந்து தண்டவாளத்தை பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
இதுகுறித்து, என்ஜின் டிரைவர் உடனடியாக வாணியம்பாடி ரெயில் நிலையத்துக்கும், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் அபிஷேக் சர்மா, ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் பழனிசாமி, ரெயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, காலை 8 மணிக்கு தண்டவாள விரிசல் ஓரளவு சரி செய்யப்பட்டது.
இதற்கிடையே, தண்டவாள விரிசல் காரணமாக சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்பட்டன.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் காலை 4-50 மணிக்கு நிறுத்தப்பட்டு காலை 8 மணிக்கு இயக்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் 4-50 மணிக்கு வாணியம்பாடி அருகே நிறுத்தப்பட்டு 8-30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
அதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் 6-50 மணிக்கு பதிலாக 8-30 மணிக்கு இயக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டையில் 6-30 மணிக்கு நிறுத்தப்பட்டு 8-20 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
தண்டவாளத்தை ஓரளவு சீரமைத்த பிறகு, நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள், 5 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன. இதையடுத்து 13 மீட்டர் அளவில் தண்டவாளத்தை மாற்றும் பணி பகல் 3 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து ரெயில்கள் வழக்கம்போல் வேகமாக இயக்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலத்தில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.