சாரல் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் விழுகிறது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
சாரல் மழை: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
Published on

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் வெப்பம் தனிந்து குளுமையான காற்று வீசுகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் தொடங்கிய சாரல் மழை 6.30 மணி வரை பெய்துகொண்டு இருந்தது.

அதன்பிறகு 8 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சடசடவென பெய்த மழை சிறிது நேரத்திலேயே நின்றுவிட்டது. அதன்பிறகு வானில் கருமேகங்களாக காட்சியளித்தன. 10 மணிக்கு பிறகு கருமேகங்கள் மறைந்து வழக்கம்போல வெயில் அடித்தது. இதைப்போல குலசேகரம், தக்கலை, களியக்காவிளை உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

மழையளவு

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு:

பேச்சிப்பாறை18.2, பெருஞ்சாணி3, சிற்றாறு 1 13.2, சிற்றாறு 2 6.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

பூதப்பாண்டி2.5, அடையாமடை2, முள்ளங்கினாவிளை7, திற்பரப்பு23.8, சுருளோடு10, கன்னிமார்2.5, புத்தன்அணை 3.4, பாலமோர்22.2 என்று பதிவாகியிருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டியதைத் தொடர்ந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 86 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. ஆனால் நேற்று 121 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

இதுபோல பெருஞ்சாணி அணைக்கு 26 கனஅடி வீதமும், சிற்றாறு 1 அணைக்கு 6 கனஅடி வீதமும், சிற்றாறு 2 அணைக்கு 20 கனஅடி வீதமும், பொய்கை அணைக்கு 3 கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 66 கனஅடி வீதமும், பெஞ்சாணி அணையில் இருந்து 30 கனஅடி வீதமும், சிற்றாறு 2 அணையில் இருந்து 3 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் விழுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்தனர். அவர்கள் திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com