

சேலம்,
பட்டு வளர்ச்சித்துறை சார்பில் பட்டு விவசாயிகள் மற்றும் பட்டுத்தொழில் முனைவோருக்கான கண்காட்சி, கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்ஜமின் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்றார். அரசு முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி திட்ட விளக்கவுரை ஆற்றினார். எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், சின்னதம்பி, மருதமுத்து, வெற்றிவேல், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ரூ.14.40 கோடியில் 24 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.4.14 கோடியில் முடிவுற்ற 10 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்டு வளர்ப்பு தொழில் விவசாயம் சார்ந்த தொழில் என்பதால், கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக மகளிருக்கு வேலைவாய்ப்பினையும்,
இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறுகிய கால இடைவெளிகளில் தொடர் வருவாயையும் ஈட்டித் தருகிறது. தமிழ்நாட்டில் மல்பெரி பட்டு வளர்ப்பு தொழில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் கச்சாப் பட்டு நூலின் தேவை அளவான 3000 மெட்ரிக் டன்னில் 1900 மெட்ரிக் டன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மல்பெரி நடவு மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.10,500 வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் மல்பெரி நடவு செய்ய ரூ.52 ஆயிரத்து 500 மானியமாகவும், மல்பெரி பயிருக்கு சொட்டு நீர் பாசனம் 1 ஏக்கரில் நிறுவிட அதிகபட்ச மானியமாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது. புழு வளர்ப்பு மனை அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் பட்டு தொழிலின் வளர்ச்சிக்காக ரூ.75 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பட்டு வாரிய நிதி உதவியையும் சேர்த்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ.92 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பட்டு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த பட்டுள்ளன. இந்திய அளவில் கச்சாப் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டு வருவதாலும், விவசாயிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாலும், வெண்பட்டு தொழில் தமிழ்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய அளவில் 89 சதவீதம் வெண்பட்டு உற்பத்தி செய்து இந்தியாவிலேயே வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
கச்சா பட்டு உற்பத்தியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பட்டு தொழில் உற்பத்தியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும். இதற்கு பட்டு விவசாயிகள், பட்டு தொழில் முனைவோர்கள், பட்டு நூற்பாளர்கள், பட்டு நெசவாளர்கள், பட்டு வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
தமிழகம் முழுவதும் 300 பட்டு உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. அதன்மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற பட்டு நூல் 1,900 மெட்ரிக் டன் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. நமக்கு வேண்டியது 3,000 மெட்ரிக் டன். விவசாயிகள் கூடுதலாக இந்த பட்டு உற்பத்தியிலே அக்கறை செலுத்தி நமக்குத் தேவையான 1,100 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யவேண்டும். அதற்கு தேவையான அடிப்படை தேவைகளை அரசு செய்து கொடுக்கும். தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக விரிவு படுத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்தில் விலை மதிக்கமுடியாத உயிர்கள் பலியாவதை தடுக்க அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும், பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கையேடு வெளியிடப்பட்டது. அந்த கையேட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதை அமைச்சர் பெஞ்சமின் பெற்றுக்கொண்டார்.