கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை
Published on

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தரின் நினைவு மண்டபம் உள்ளது. அதன் அருகே உள்ள இன்னொரு பாறையில் உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 133 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள இந்த சிலை கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் தமிழறிஞர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலையிலும் குமரி மாவட்ட தமிழறிஞர்கள் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்றனர். அங்கு திருவள்ளுவரின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு, குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலாளர் டாக்டர் பத்மநாபன் தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக துணைவேந்தர் பாஸ்கர், சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன், சிதம்பர நடராஜன், ஆபத்து காத்தபிள்ளை, பொன் மகாதேவன், தியாகி முத்து கருப்பன், அய்யப்பன் பிள்ளை, பைரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழறிஞர்களின் பொது கூட்டம் நடந்தது. இதில் திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதால் விவேகானந்தர் சிலையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்க வேண்டும்,

அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் சிலை திறப்பு ஆண்டுவிழாவை அரசே கொண்டாட வேண்டும். புத்தேரி மேம்பாலத்திற்கு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெயர் சூட்ட வேண்டும். கன்னியாகுமரி படகு வழிச்சாலைக்கு ஏக்நாத் ராணடே பெயரையும் சூட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com