

கடலூர்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் காயம் பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி வாகைக்குளத்துக்கு நேற்று முன்தினம் சென்றார்.
ஆனால் தூத்துக்குடிக்குள் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படாததால், போலீசார் அவரை கைது செய்து சாயர்புரத்தில் காவலில் வைத்தனர். ஏற்கனவே அவர் மீது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளதால், விழுப்புரம் மாவட்ட போலீசார் தூத்துக்குடிக்கு சென்று அவரை கைது செய்து திருக்கோவிலூருக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூர் அண்ணா பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா பாலத்திலும், இம்பீரியல் சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், தமிழக வாழ்வுரிமை கட்சியினரை கைது செய்தனர். இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரிச்சர்ட் தேவநாதன், நகர தலைவர் சதீஷ், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கமலநாதன், சம்பத், பிரபு, பாண்டியராஜ், ரத்தினம் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் சுரேந்தர் தலைமையில் பண்ருட்டி 4 முனை சந்திப்பு சாலையில் அந்த கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனே விடுவிக்க கோரியும் கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட சுரேந்தர், மாநில தமிழர்படை தலைவர் ஜோதிலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் ராஜகோபால், பாலமுருகன், நாராயணன், தேவராசு, பலாப்பட்டு சிவா, மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா, ஒன்றிய தலைவர் விஜயகாந்த், தமிழர்படை மோகன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் நெல்லிக்குப்பத்தில் அண்ணாசிலை அருகே மறியலில் ஈடுபட்ட அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் ராஜூ உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலத்தில் நகர செயலாளர் சேகர் தலைமையில் பாலக்கரை ரவுண்டானாவில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அவர்களை கலைந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எனவே அவர்களை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக சேகர், மாவட்ட செயலாளர் சின்னதுரை, மாநில நிர்வாகிகள் தமிழ்செல்வன், ராவணன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், பன்னீர்செல்வம், செந்தாமரை, மாணவரணி இளஞ்சூரியன் 20 பேரை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினார்கள்.