குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை உயர்வு

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை உயர்ந்தது.
குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை உயர்வு
Published on

குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டுகின்றனர். அந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலைத்தூள் ஏலம் நடக்கிறது.

அதில் வியாழக்கிழமை இலை ரக தேயிலைத்தூளும், வெள்ளிக்கிழமை டஸ்ட் ரக தேயிலைத்தூளும் ஏலம் விடப்படுகிறது. அந்த ஏலம் ஆன்லைனில் நடக்கிறது. அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். அந்த ஏலத்தில் தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 19, 20-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு 13 லட்சத்து 55 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 9 லட்சத்து 29 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 4 லட்சத்து 26 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 8 லட்சத்து 53 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 64 சதவீத விற்பனை. விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.7 கோடியே 2 லட்சம் ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தைவிட ரூ.2 விலை உயர்ந்தது.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.313, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.259 என ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.62 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.88 முதல் ரூ.125 வரையும் விற்பனையானது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.62 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.90 முதல் ரூ.124 வரையும் ஏலம் போனது.

அடுத்த ஏலம் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடக்கிறது. அந்த ஏலத்துக்கு 13 லட்சத்து 2 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com