

பட்டுக்கோட்டை:-
பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு பள்ளி ஆசிரியர் பஸ் மோதி பலியானார். பணிமாறுதலுக்கான கடிதத்தை வாங்க வந்தபோது இந்த துயர சம்பவம் நேர்ந்தது.
அரசு பள்ளி ஆசிரியர்
மதுரை தத்தனேரியை அடுத்த களத்துபொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் சிவன்ராஜ்(வயது 31). இவர், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பீர்க்கலைக்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணிமாறுதல் கிடைத்தது.
பஸ் மோதி பலி
இந்த நிலையில் நேற்று ஆலத்தூர் பள்ளியில் தனது பணி மாறுதலுக்கான கடிதத்தை வாங்குவதற்காக சிவன்ராஜ், மோட்டார் சைக்கிளில் காரைக்குடியில் இருந்து ஆலத்தூருக்கு வந்தார். பட்டுக்கோட்டை அருகே பெருமாள் கோவில் மகாராஜ சமுத்திரம் பாலம் அருகே வந்த போது பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பஸ், ஆசிரியர் சிவன்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி சிவன்ராஜ் கீழே விழுந்த நிலையில், பஸ்சின் பின்புற சக்கரம் அவருடைய தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார், சிவன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் சாத்தம்பட்டி வடகாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(36) என்பவரை கைது செய்தனர்.