அதிகாரியை சத்தியம் செய்ய சொல்லி சூடம் ஏற்றி வந்த விவசாயி

விவசாயிகளிடம் கமிஷன் வாங்கவில்லை என்று அதிகாரியை சத்தியம் செய்ய சொல்லி சூடம் ஏற்றி விவசாயி வந்ததால் தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரியை சத்தியம் செய்ய சொல்லி சூடம் ஏற்றி வந்த விவசாயி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க தயாரான நேரத்தில் மதுக்கூரை சேர்ந்த விவசாயி சந்திரன், சிறிய கல்லில் சூடத்தை ஏற்றிக்கொண்டு கூட்டத்திற்கு வந்தார்.

அவர் நேராக உயர் அதிகாரிகள் அமர்ந்து இருந்த பகுதிக்கு சென்று எரிந்து கொண்டிருந்த சூடத்தை நீட்டி, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டைக்கு ரூ.35 வரை கமிஷன் வாங்கப்படவில்லை என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல பொது மேலாளர், சத்தியம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் கூட்டம் நடந்த அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், இது அரசு அலுவலகம் என்று நினைத்தீர்களா? அல்லது வேறு எந்த இடம் என நினைத்தீர்களா? என கோபத்துடன் பேசினார். என் மீது பொய் புகார் கூறியதால் சத்தியம் செய்ய சொல்வதாக சந்திரன் கூறினார். இதை பார்த்த போலீஸ்காரர்கள் விரைந்து வந்து சூடத்தை அணைத்தனர். இது குறித்து விவசாயி சந்திரன் கூறியதாவது.

கீழக்குறிச்சி, மதுக்கூர் உள்ளிட்ட பல இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.35 வரை விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பெறப்படுகிறது. இது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளிடம் கமிஷன் பெறப்படுவதாக முறையிட்டு கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதற்காக நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல பொதுமேலாளர் தூண்டுதலின்பேரில் என் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் சந்திரன் ரவுடிபோல் செயல்படுவதாகவும், அவர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்க அருகதை அற்றவர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் மதுக்கூர் போலீசார் என்னை அழைத்து விசாரித்தனர். எனக்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி கொடுத்துவிட்டு வந்துள்ளேன்.

கமிஷன் வாங்கப்படுவதாக குற்றம் சாட்டிய காரணத்தினால் என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து கமிஷன் வாங்கவில்லை என்றால் சூடத்தை அணைத்து சத்தியம் வாங்கவே சூடத்துடன் கூட்டத்திற்கு சென்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com