

சேலம்,
சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள கக்கன்காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சதீஷ்குமார்(வயது 27), டெம்போ டிரைவர். இவர் கடந்த 4-ந் தேதி இரவு அதே பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்று வரும் திலீப்(33) வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு திலீப்பிடம் குடிப்பதற்கு மதுபாட்டில்கள் கேட்டார். ஆனால் அவர் மதுபாட்டில் இல்லை என்று கூறியதால் சதீஷ்குமார் வீட்டுக்கு திரும்பினார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் அவருடைய வீட்டுக்கு திலீப், தனது மனைவி தேவி(27), உறவினர்கள் ரமேஷ்(20), சக்திவேல்(25) ஆகியோருடன் சென்றார். அங்கு அவரிடம், எனது வீட்டில் இருந்த பணத்தை ஏன் திருடி வந்துவிட்டாய்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் சதீஷ்குமாரை அடித்துக் கொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக திலீப் அவருடைய மனைவி தேவி, ரமேஷ், சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீசாரிடம் திலீப் கூறும் போது, சதீஷ்குமார் என்னிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். இதற்கு நான் கொடுக்கவில்லை. இதனால் அவர் எனது வீட்டுக்குள் புகுந்து ரூ.2 ஆயிரத்தை எடுத்து சென்று விட்டார். இதன் காரணமாக அவருடைய வீட்டுக்கு சென்று இதுதொடர்பாக கேட்டோம். அப்போது எங்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை அடித்துக் கொலை செய்தோம் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.