மதுரையில் 36 நாட்களாக நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மதுரை மகபூப்பாளையத்தில் கடந்த 36 நாட்களாக நடந்து வந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 36 நாட்களாக நடந்த குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
Published on

மதுரை,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால், தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் தொடர் இருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். மதுரை மகபூப்பாளையத்திலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 36 நாட்களாக தொடர் இருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர் இருப்பு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவு செய்தனர்.

ஆனால், 2 நாட்களுக்கு முன்பு மதுரை ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்திருந்தனர். இதனிடையே, பொதுமக்களின் நலன் கருதி, இந்த போராட்டத்தை நேற்று முதல் தற்காலிகமாக ஒத்திவைக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து, மகபூப்பாளையத்தில் இருந்து மதுரை ரெயில் நிலையம் நோக்கி முஸ்லிம்களின் பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு போராட்டக்குழுத்தலைவர் நிஜாம்அலிகான் தலைமை தாங்கினார். முகமது கவுஸ் முன்னிலை வகித்தார். பேரணியானது டி.பி.ரோட்டில் இருந்து எல்லீஸ் நகர் பாலம் வழியாக மேலவெளிவீதி ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் வரை வந்தது.

பேரணியின் போது, கருப்பு முகமூடி அணிந்தும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியும், வேண்டாம் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். என்ற வாசகங்கள் எழுதிய கருப்பு பேட்ஜ் அணிந்தும் வந்தனர். அத்துடன், இந்த சட்டத்தை சவக்குழிக்குள் அனுப்பும் வரை போராடுவோம் என்பதை வலியுறுத்தி, இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்லும் பெட்டியுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் இருந்து கருப்பு பலூன் களை பறக்க விட்டனர்.

பின்னர் மீண்டும் பேரணி மகபூப்பாளையம் ஷாஹீன் பாக் திடலுக்கு வந்து சேர்ந்தது. இந்த பேரணியில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங் களை எழுப்பினர். பேரணிக்கான ஏற்பாடுகளை த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர் பிரண்ட், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆகியன செய்திருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை திலகர் திடல் உதவி கமிஷனர் வேணுகோபால் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

திடலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விஜயராஜன், ம.தி.மு.க. மஹபூப்ஜான் , விடுதலை சிறுத்தைகள் கட்சி கதிரவன், மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றிதிபேன், தி.மு.க. சிறுபான்மை அணி ஷேக் இஸ்மாயில் ஆகியோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com