திருவிடைமருதூர் அருகே பயங்கரம்: பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை கடைகள் அடைப்பு-போலீஸ் குவிப்பு

திருவிடைமருதூர் அருகே பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
திருவிடைமருதூர் அருகே பயங்கரம்: பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை கடைகள் அடைப்பு-போலீஸ் குவிப்பு
Published on

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மேல தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 42). திருவிடைமருதூர் நகர பா.ம.க. முன்னாள் செயலாளரான இவர், திருபுவனத்தில் சாமியானா பந்தல் மற்றும் வாடகை பாத்திர கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் கேட்டரிங் ஏஜெண்டாகவும் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் இவர், சமையல் வேலைக்கு ஆட்களை அழைப்பதற்காக திருபுவனம் ஆதிதிராவிடர் தெருவுக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த ஒரு பிரிவை சேர்ந்த சிலருக்கும், ராமலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அன்று இரவு ராமலிங்கம் வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சரக்கு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். திருபுவனத்தில் உள்ள ஒரு தெருவில் வந்து கொண்டு இருந்தபோது அவருடைய ஆட்டோவை, கார் ஒன்று வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய நான்கு பேர் கொண்ட கும்பல், ராமலிங்கத்தை ஆட்டோவில் இருந்து இறக்கி அவரது இரு கைகளையும் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கேயே போட்டு விட்டு மர்ம நபர்கள், தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

கைகள் வெட்டப்பட்டதால் ராமலிங்கத்திற்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. அப்போது அந்த பகுதியாக வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமலிங்கத்தை பார்த்து அவரை உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து திருவிடைமருதூர் பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டுகள் மகேஸ்வரன்(தஞ்சை), துரை(திருவாரூர்) ஆகியோர் முன்னிலையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து நேற்று மதியம் ராமலிங்கத்தின் உடல் திருபுவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ராமலிங்கத்தின் உறவினர்களும், சில இந்து அமைப்புகளும் கொலையாளிகளை கைது செய்தால் தான் நாங்கள் உடலை தகனம் செய்வோம். அதுவரை செய்யமாட்டோம் என கூறினர்.

மேலும் சிலர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி திருபுவனம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவத்தை கண்டித்து திருபுவனம், திரு விடைமருதூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், மதமாற்றம் செய்வதை தட்டிக்கேட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறினர். கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் அவர்களை பிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

பா.ம.க. முன்னாள் நகர செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com