கலபுரகி விமான நிலையத்தில் சோதனை ஓட்டம்

கலபுரகி விமான நிலையத்தில் நேற்று 2 விமானங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கலபுரகி விமான நிலையத்தில் சோதனை ஓட்டம்
Published on

பெங்களூரு,

வட கர்நாடகத்தில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக கலபுரகி மாவட்டம் உள்ளது. அங்கு மாநில அரசு சார்பில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ரூ.175 கோடி செலவில் விமான நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த நிலையில் கலபுரகி விமான நிலையத்திற்கு முதல் முறையாக நேற்று சோதனை அடிப்படையில் 2 சிறிய ரக விமானங்கள் ஐதராபாத்தில் இருந்து வந்தன. அந்த விமானங்களை நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மந்திரி பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதையடுத்து விமான நிலையத்தின் ஓடுதள பாதையில் 2 விமானங்களையும் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. முதல் முறையாக கலபுரகி விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்ததை கண்டு கலபுரகி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், இந்த விமான நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் முழுவதையும் மாநில அரசே செய்துள்ளது. இனி இதை நிர்வகிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு ஆகும். உதான் திட்டத்தின் கீழ் கலபுரகிக்கு பயணிகள் விமான சேவையை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட கர்நாடகத்தில் பின்தங்கிய பகுதிகளில் முக்கியமான மாவட்டமாக கலபுரகி இருக்கிறது. அதனால் இவற்றின் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மந்திரி பிரியங்க் கார்கே பேசுகையில், கலபுரகி விமான நிலையத்தை கட்டமைக்கும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டன. 3-வது கட்ட உதான் திட்டத்தின் கீழ் கலபுரகியில் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமான சேவை தொடங்க காலதாமதம் ஆகும். அதுவரை இந்த விமான நிலையத்தில் விமான பயிற்சி வகுப்பு தொடங்கப் படும். ஐதராபாத்தில் உள்ள சில தனியார் விமான பயிற்சி நிறுவனங்கள் இங்கு பயிற்சியை தொடங்க முன்வந்துள்ளன. ஓடுதளம் சேதம் அடையக்கூடாது என்ற காரணத்திற்காக இந்த விமான நிலையத்தை விமான பயிற்சி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com