

கெங்கவல்லி,
சேலம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் வசிப்பவர் கிருஷ்ணராஜ் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களது மகளுக்கு வருகிற 19-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.இதற்காக நேற்று காலை 10 மணியளவில் கிருஷ்ணராஜிம், ஜெயந்தியும் ஆத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். மகள் வெளியே சென்று இருந்தார்.
நகை திருட்டு
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர், கிருஷ்ணராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் பின்பக்க சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளார். வீட்டு பின்பக்க கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. அதை திறந்து வீட்டின் அறைக்குள் புகுந்துள்ளார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.
மதியம் வீடு திரும்பிய கிருஷ்ணராஜின் மகள் வீட்டில் திருட்டு நடந்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசில் கிருஷ்ணராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டு சுவர் ஏறி குதித்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.