

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 589 ஊராட்சிகள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் ஏராளமான கிளை ஆறுகள் செல்கின்றன. இந்த ஆறுகள் பல்வேறு கிராமங்களுக்கு இடையே செல்கிறது.
இதனால் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல, முக்கிய இடங்களுக்கு செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் இல்லாததால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலம் உள்ளது. இதனால் கால விரையம் ஆவதோடு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது. ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டினால் பொதுமக்கள் எளிதில் செல்வதோடு, காலவிரையமும் தவிர்க்கப்படும்.
பொதுமக்கள் கோரிக்கை
இதையடுத்து பொதுமக்கள் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆறுகளின் குறுக்கே பாலங்கள் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒரு சில கிராம மக்கள் 25 ஆண்டுகளாகவும், சில கிராமங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து மத்திய, மாநில அரசின் திட்டங்களின் மூலம் 30 பாலங்கள் இந்த ஆண்டு நபார்டு நிதி உதவி மற்றும் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டங்கள் மூலம் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாபநாசம் தொகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உமையாள்புரத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் செலவில் 50 மீட்டர் நீளத்துக்கும், இளங்கார்குடி மேட்டுத்தெருவில் காவிரி ஆற்றின் குறுக்கே 68 மீட்டர் நீளத்துக்கு ரூ.5 கோடி செலவிலும், ராஜகிரியில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 50 லட்சம் செலவிலும், திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடியே 25 லட்சம் செலவிலும் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அம்மாப்பேட்டை பகுதியில் வெண்ணாற்றின் குறுக்கே வெண்ணுகுடியில் ரூ.6 கோடியிலும் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
246 சாலை பணிகள்
இதே போல் இந்த ஆண்டு பிரதமமந்திரி கிராம சாலை திட்டம், நபார்டு திட்டம், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டம், தாய் திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 246 சாலை பணிகள் ரூ.88 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்மாப்பேட்டை ஊராட்சி தீபாம்பாள்புரம்- மலையபுரம் இடையே 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.1 கோடியே 67 லட்சம் செலவிலும், மெலட்டூர்- கோவர்த்தன்குடி இடையே 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரு.2 கோடி செலவிலும், கோவலூர்- கோனூர் இடையே 1 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.1 கோடியே 70 லட்சம் செலவிலும் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 மாதங்களுக்குள் இந்த பணிகளை முடிக்கும் வகையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் 122 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்.