

சென்னை,
கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்று. சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-ம் நாள் உயிர்த்தெழும் தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது உயிர்ப்பு பெருவிழாவாகவும், உயிர்த்தெழுந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருப்பார்கள். அதன்படி, சாம்பல் புதன்கிழமை தினத்தில் இருந்து இந்த 40 நாட்கள் உபவாசத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம். அந்த வகையில் சாம்பல் புதன் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
சாம்பலில் சிலுவை அடையாளம்
இதையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் வழிபாடு நடத்தப்பட்டன. வழிபாடு நிறைவு பெற்றதும், ஆலயத்துக்கு வந்திருந்த மக்களுக்கு பாதிரியார்கள் நெற்றியில் சாம்பல் மூலம் சிலுவை அடையாளம் இட்டனர். 40 நாட்கள் தவக்காலத்தை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறும், அதன் பின்னர், இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்வாகவும், சிலுவைப்பாடுகளின்போது அவர் முன்மொழிந்த வார்த்தைகளை குறித்து தியானிக்கவும் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது
அதன்படி, வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ளது. அன்றைய நாளில் இருந்து 3-வது நாள் இயேசு உயிர்ந்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வருகிறது.