8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

சென்னை - சேலம் இடையே அமைய உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே 8 வழி பசுமை சாலையை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். அவரை பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அவர், பூரண குணமடைய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு, காவிரி நீர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. தமிழகத்தில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக விவசாயிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர் என்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பது முழுக்க முழுக்க பொய்யான தகவல். அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்று விவசாயிகளை நேரில் சந்திக்க முடியுமா. இந்த பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டத்தில் 5 மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தற்போது கணக்கில்லாமல் தண்ணீர் வருகின்றது. கர்நாடக அரசு உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அதிகப்படியான மழையின் காரணமாக தண்ணீர் வருகின்றது. காவிரியில் இருந்து வரும் தண்ணீர் வீணாகி போகிறது. அதை தேக்கி வைக்க அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வருமான வரித்துறை சோதனை என்பது ஒருவரை அடிபணிய வைக்கவும், அவரை வளைக்கவும் தான் நடைபெறுகிறது. மத்திய அரசிற்கு அடிபணிந்து விட்டால் சோதனை முடிவு பெற்று விடும் வகையில் உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் காவிரி விவகாரம் குறித்து எந்த தகவலும் தெரியாமல் கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறுகிறார். இனி பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை. காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட மத்திய அரசு ஆணை வழங்க வேண்டும். மத்திய அரசு செயல்பட மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com