சாக்கடை அடைப்பினை நீக்க ரோபோவை பயன்படுத்தக்கோரி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

பாதாள சாக்கடை அடைப்பினை நீக்குவது உள்ளிட்டவற்றுக்கு ரோபோவை பயன் படுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்யக்கோரி கரூரில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாக்கடை அடைப்பினை நீக்க ரோபோவை பயன்படுத்தக்கோரி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முல்லையரசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிதி செயலாளர் பெருமாவளவன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பெரியர்தாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, கழிவுநீர்தொட்டி உள்ளிட்டவற்றை நேரடியாக தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதால் அடிக்கடி விஷவாயு தாக்கி மரணம் நிகழ்கிறது. எனவே இதனை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்டவற்றை பணியாளர்களை வைத்து அகற்றாமல், கேரளாவை போல் பாண்டிகூட் ரோபோ எந்திரத்தினை பயன்படுத்தும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் 2015-ஐ நடைமுறைப்படுத்திட வேண்டும். மேலும் வீடு-நிறுவனங்களில் உள்ள கழிவுநீர்தொட்டி உள்ளிட்டவற்றில் மனிதனை பணி செய்ய நிர்பந்திக்க கூடாது என்பது குறித்தும் கரூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட தலைவர் தனபால் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com