

தேனி,
பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.முருகன் போட்டியிடுகிறார். அவர், பெரியகுளம் தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்காக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம், கைலாசப்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முருகன் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். வீதி, வீதியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் வேலை பார்ப்பவர்களை சந்தித்தும் ஆதரவு திரட்டினர்.
பிரசாரத்தின் போது அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். இந்த பிரசாரத்தின் போது வேட்பாளர் எம்.முருகன் கூறியதாவது:-
இலவச வாஷிங்மெஷின்
தமிழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி பெரும்வாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனால் கல்வி, தொழில், விவசாயம், ஏற்றுமதி என அனைத்து துறைகளிலும் மாநிலம் சிறந்து விளங்குகிறது. ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியை திறம்பட நடத்தி வருகின்றனர். இந்த நல்லாட்சியையே மக்களும் விரும்புகின்றனர்.
அனைத்து குடும்பங்களுக்கும் இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,500 வழங்கப்படும். அந்த நிதி அவர்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்தப்படும். பெரியகுளம் தொகுதியில் அனைத்து ஊராட்சிகளையும் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கவும், சாலைகளை சீராக பராமரிக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.