நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களை கைவிடக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களை கைவிடக்கோரி கரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களை கைவிடக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்,

கரூர் மாவட்ட அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினால் வருங்காலத்தில் வரும் ஆபத்துகள் குறித்தும், இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்பட்டு வறண்ட நிலமாக மாறுவது பற்றியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம் உள்ளிட்டோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்திலுள்ள மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் நாசகார திட்டத்தை கைவிட வேண்டும். நச்சுதன்மையை பரப்பும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

விவசாயத்தை சீர்குலைக்கும் மீத்தேன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை தடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, இளைஞர்கள் பலர் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் சிவசண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் நடராஜ், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ரவி உள்பட இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com