சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்

தடை காலம் முடிந்ததையடுத்து சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
சின்னமுட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்
Published on

கன்னியாகுமரி,

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் முதல் திருவள்ளூர் வரை கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல் போன்ற பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தடை காலம் நேற்று முன்தினம் இரவுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்ல நேற்று முன்தினம் மாலையிலேயே தயாரானார்கள். படகுகளில் தேவையான டீசல், தண்ணீர், ஐஸ் கட்டிகள் போன்றவை நிரப்பப்பட்டன. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் விசைப்படகுகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்.

படகுகள் அனைத்தும் கடலுக்கு செல்ல தயாரான நிலையில், நேற்று முன்தினம் இரவு மீன்வளத்துறை அதிகாரிகள், கடல் சீதோஷ்ணத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்கள் யாருக்கும் டோக்கன் வழங்கப்பட மாட்டாது என அறிவித்தனர்.

இதற்கு விசைப்படகு உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகிவிட்டதாகவும், அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் அதிகாரிகள், விசைப்படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன்களை வழங்கவில்லை. இதையடுத்து நேற்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் டோக்கன் பெறாமல் கடலுக்கு புறப்பட்டன.

இதற்கிடையே மீனவர்கள் கடலுக்கு புறப்படுவதை தொடர்ந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் கன்னியாகுமரி திரும்பி விட்டனர்.

இதுபோல், விசைப்படகுகள் பிடித்து வரும் மீன்களை வாங்கி செல்ல வியாபாரிகளும் சின்னமுட்டம் மீன்சந்தையில் திரண்டனர். இதனால், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com