வேதாரண்யம் அருகே, படகு கவிழ்ந்தது: நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

வேதாரண்யம் அருகே படகு கவிழ்ந்தது. இதன் காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
வேதாரண்யம் அருகே, படகு கவிழ்ந்தது: நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
Published on

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் செருதூர் மீனவர் காலனியை சேர்ந்தவர் பிச்சாவரம். இவருக்கு சொந்தமான பைபர் படகு எனப்படும் சிறிய வகை படகில் நேற்றுமுன்தினம் மதியம் அவருடைய மகன்கள் பிரதீப் (வயது27), பிரசாத் (25) மற்றும் அதே ஊரை சேர்ந்த கவியரசன் (22), விஸ்வநாதன் (23) ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன்பிடித்து விட்டு நேற்று மதியம் 4 பேரும் கரைக்கு வந்து கொண்டிருந்தனர். வேதாரண்யம் கோடியக்கரைக்கு அருகே வந்தபோது நடுக்கடலில் திடீரென சூறைக்காற்று வீசியது. காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் படகு கவிழ்ந்தது.

இதனால் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தவறி விழுந்து தத்தளித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் 4 பேரும், கவிழ்ந்த படகின் மேல் ஏறி உயிர்தப்பினர்.

ஆனால் படகு கவிழ்ந்து இருந்ததால் அவர்களால் கரை திரும்ப இயலவில்லை. இந்த நிலையில் அந்த வழியாக மீன்பிடிக்க வந்த காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் செருதூர் மீனவ கிராமத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செருதூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள், மற்றொரு படகில் சென்று கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com