

வேலூர்,
வேலூர் காட்பாடி பர்னீஸ்புரம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் அல்பியஸ் சன்னி. இவரது மகன் ஜேக்கப்ராஜ் மோசஸ் (வயது 24), ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 16-ந் தேதி மாலை இவர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருவலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது திடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த அவர் மயக்கம் அடைந்தார்.
உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் ஜேக்கப்ராஜ் மோசசுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை டாக்டர்கள் குழுவினர் நேற்று உறுதி செய்தனர்.
இதையடுத்து ஜேக்கப்ராஜ் மோசசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகளான இதயம், கல்லீரல், 2 சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது.
அவரது இதயம் குளிரூட்டப்பட்ட பாதுகாக்கப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்பட்டு கார்மூலம் சென்னை பிராய்ன்டினர் லைப்லைன் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும், நுரையீரல், போர்ட்டிஸ் மலர் மருத்துவமனைக்கும் தனித்தனியே 2 ஆம்புலன்ஸ்சுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை சி.எம்.சி. மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது.