தம்மம்பட்டி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 50 பேர் காயம்

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்தது. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய 50 பேர் காயம் அடைந்தனர்.
தம்மம்பட்டி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 50 பேர் காயம்
Published on

தம்மம்பட்டி,

தம்மம்பட்டியை அடுத்துள்ள செந்தாரப்பட்டியில் நேற்று ஊர் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதையொட்டி பஜனை மடத்தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க தம்மம்பட்டி, கெங்கவல்லி, பெரம்பலூர், திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. அந்த காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை 500-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பங்கேற்று அடக்க பாய்ந்தனர். இதில் வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளுக்கும், காளைகளை மடக்கி பிடித்த காளையர்களுக்கும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

50 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 50 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் வேலுமணி தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு பிற்பகல் 3.30 மணி வரை நடந்தது. இந்த ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து ஆர்வத்துடன் பார்த்தனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் ஆத்தூர், தம்மம்பட்டி போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com