மெழுகுவர்த்தி கீழே விழுந்து பெண் கூலி தொழிலாளியின் குடிசை தீயில் எரிந்து சாம்பல்

தா.பழூரில் மெழுகுவர்த்தி கீழே விழுந்ததில் பெண் கூலி தொழிலாளியின் குடிசை தீயில் எரிந்து சாம்பலானது. அக்கம்பக்கத்தினர் தொழிலாளியின் மகன், மகள்களை மீட்டதால் தீவிபத்தில் இருந்து தப்பினர்.
மெழுகுவர்த்தி கீழே விழுந்து பெண் கூலி தொழிலாளியின் குடிசை தீயில் எரிந்து சாம்பல்
Published on

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் தோப்புத்தெருவை சேர்ந்தவர் சுமதி (வயது 39). இவரது கணவர் ரவிச்சந்திரன். இவர்களுக்கு செல்வி (17), சரண்யா (15) என்ற 2 மகள்களும், பாலசுப்பிரமணியன் (11) என்ற ஒரு மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் இறந்து பல வருடங்களாகிறது.

இதனால் சுமதி தனது மகன், மகள்களுடன் அங்குள்ள குடிசையில் வசித்து வருகிறார். சுமதி கூலி வேலைக்கு சென்று அவர்களை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் சுமதி வீட்டில், தனது மகன், மகள்களை விட்டுவிட்டு, கடைவீதிக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

தப்பினர்

அப்போது, வீட்டில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். இந்நிலையில் மெழுகுவர்த்தி கீழே விழுந்து குடிசையில் தீ பற்றிக்கொண்டது. தொடர்ந்து தீ வேகமாக குடிசையில் பரவியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டுக்குள் இருந்த 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதனால் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் தீயணைப்பு வண்டி வருவதற்குள் குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் குடிசையில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது. இது குறித்து தா.பழூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com