

ராஜபாளையம்,
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த இளங்கோவன் என்பவருடைய மகன் பவித்ரன் (வயது22). இவருக்கு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பெண் பார்க்க முடிவு செய்தனர். இதற்காக காரில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை பவித்ரன் ஓட்டிச் சென்றார்.
அதிகாலையில் ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூர் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அங்கு புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதை கவனிக்காமல் கார் சென்றதால் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
இதில் காரில் வந்த பவித்ரனின் தாயார் மலர்ச்செல்வி (வயது 47), தலையில்பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
மேலும் பவித்ரன், அவரது சகோதரி தீபா (27), தீபாவின் குழந்தைகள் சுருதி (9), குரு(2) ஆகியோர் காயம் அடைந்தார்கள். 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.