செல்போனை திருடனிடம் இருந்து மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர்

பஸ்சில் தொலைத்த செல்போனை, திருடனிடம் இருந்து மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்.
செல்போனை திருடனிடம் இருந்து மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர்
Published on

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயசந்திரன் (வயது 55). இவர் நேற்றுமுன்தினம் வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு ஸ்டூடியோ வைத்துள்ளார். இவர் வாடிப்பட்டியிலிருந்து மதுரைக்கு சென்ற போது பஸ்சில் தூங்கிவிட்டாராம். இதை நோட்டமிட்ட மர்ம நபர், நைசாக ஜெயசந்திரன் சட்டைப்பையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிக் கொண்டு, பெரியார் பஸ்நிலைய திருப்பத்தில் பஸ் வந்த போது இறங்கிவிட்டாராம்.

இதையடுத்து பஸ் நின்றதும், ஜெயசந்திரன் செல்போனை தேடினார். அதை காணாததால், தனது செல்போன் எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் அதை யாரும் எடுக்கவில்லையாம், இதையடுத்து கவலையடைந்த அவர் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் பலனில்லை. இந்தநிலையில் நேற்று தனது போனிற்கு தொடர்பு கொண்ட போது, அதில் பேசியவர் திருநகர் பர்மாகாலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமசந்திரன் என்று கூறினார். ஜெயசந்திரன் தனது செல்போன் குறித்து கூறியதும், சோழவந்தானுக்கு சவாரி வந்ததாகவும், அங்கு வந்து செல்போனை பெற்றுக்கொள்ளுமாறும் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அங்கு சென்ற ஜெயசந்திரனிடம், ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு செல்போனை ஒப்படைத்த ராமச்சந்திரன், செல்போன் தன்னிடம் வந்த விவரம் குறித்து கூறினார். அதில், முன்பின் தெரியாத ஒருவர் தன்னிடம் செல்போனை விற்க வந்ததாகவும், அவரிடம் போனின் ரகசிய குறியீடு குறித்து கேட்ட போது, அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகமடைந்து போலீசில் புகார் செய்வதாக கூறியதும், செல்போனை தன்னிடமே கொடுத்துவிட்டு சென்றதாக கூறினார்.

இதையடுத்து செல்போனை பெற்றுக் கொண்ட ஜெயச்சந்திரனும், அந்த பகுதி பொதுமக்களும் ஆட்டோடிரைவர் ராமச்சந்திரனை பாராட்டினர். இதுபோன்று பலமுறை தனது ஆட்டோவில் தவறவிட்டு சென்ற பொருட்களை உரியவர்களிடம் ராமசந்திரன் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com